/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan_29.jpg)
(48) ஆட்டோசங்கராக ஆனந்த்ராஜ்!
எந்த ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஆர்.கே.செல்வமணியின் மனம் புண்பட்டதோ, அதே கம்பெனியில் சிவப்புக் கம்பள வரவேற்பு. விஜயகாந்த்தும் ராவுத்தரும் செல்வமணிக்கு அழைப்பு விடுத்தார்கள்.
வேறு யாராக இருந்தாலும் "வரமாட் டேன்' என்று உதாசீனப்படுத்தியிருப்பார்கள். செல்வமணி அப்படிச் செய்யவில்லை. இப்ராகிம் ராவுத்தரை தயாரிப்பாளராகவும், விஜயகாந்த்தை ஹீரோவாகவும் மட்டும் அவர் நினைக்கவில்லை. தனது அப்பா, அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தார்.
"புலன் விசாரணை' படத்தில் நடந்தவை களையெல்லாம் மறந்துவிட்டு உடனே ராவுத்தர் பிலிம்ஸுக்கு வந்தார் செல்வமணி. அடுத்த படத்தையும் அவரையே இயக்கச் சொன்னார் கள். தனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர்களுக் காக பெரிய சம்பளம் பேசி, வாங்கிய பெரிய அட்வான்ஸையும் அந்தப் பெரிய தயாரிப்பாள ரிடம் திருப்பிக் கொடுத்தார் செல்வமணி. அந்தத் தயாரிப்பாளரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.
இந்த மாற்றங்கள் ஏற்பட நானும் ஒரு காரணம். செல்வமணி கொடுத்த வெற்றிக்காக மட்டும் நான் விஜயகாந்த்திடமும், இப்ராகிம் ராவுத்தரிடமும் செல்வமணியைப் பற்றி பேசவில்லை. அவருடைய திறமைக்காக மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டிய பாச உணர்வு, நமக்கு செல்வமணி வேண்டும் என்ற நட்புணர்வு.
நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஆர்.கே. செல்வமணியின் பயணம், ராவுத்தர் பிலிம்ஸில் "கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தொடங்கியது. அந்தப் படத்தில் அவருக்குப் பெரிய சம்பளம் இல்லை. ஆனால் பெரிய கடமை இருந்தது. காரணம், விஜயகாந்த்துக்கு "கேப்டன் பிரபாகரன்' 100-வது படம். அதைப் பிரமாண்டப் படைப்பாக "புலன் விசாரணை' படத்தை விடவும் வெற்றிப்படமாக உருவாக்கும் பெரும் சுமை, அப்படிச் சொல்வதை விட மிகப்பெரிய பொறுப்பு செல்வமணியின் தலையில் ஏற்றி வைக்கப்பட்டது.
"புலன் விசாரணை'யில் எல்லாமே சிறப்பாக இருந்தது. அண்ணன் இசைஞானி இளையராஜா கலக்கியிருந்தார். சரத் சாரை பற்றி ஏற்கனவே சொன்னேன். ஆட்டோ சங்கர் இன்ஸ்பிரேஷனில் உருவாகியிருந்த கேரக்டரில் ஆனந்த்ராஜ் அசத்தியிருந்தார். அண்ணன் ராதாரவி, அமைச்சராக வந்து மிரட்டியிருந்தார். எனது வசனங்களுக்கும் திரையரங்குகளில் பலத்த கைத்தட்டல்கள்... ஆரவாரங்கள்.
ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர்தான். ஒரு கேப்டனாக "புலன் விசாரணை'யை வெற்றிபெற வைத்த செல்வமணிக்கு, "கேப்டன் பிரபாகரன்' படத்தை எப்படி உருவாக்குவது என்ற சிந்தனையே சுவாசமாகிப் போனது. "புலன் விசாரணை' படத்தை விட சிறப்பாக எழுத வேண்டும், நிறைய கைத்தட்டல்களை வாங்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம், "புலன் விசாரணை' படத்தில் அண்ணன் ராதாரவியும், ஆனந்த்ராஜும் வரும் காட்சிகள் எல்லாமே அருமையாக இருக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan1_29.jpg)
செல்வமணியும் நானும் இணைந்த படங்களில் நாங்கள் வில்லன்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருப்போம். "புலன் விசாரணை'யும் அப்படி அமைந்த படம்தான். அதில் ஒரு காட்சி என் நினைவுக்கு வருகிறது.
படத்தில் ஆனந்த்ராஜுக்கு "தர்மா' என்று பெயர். ராதாரவி அண்ணன் அமைச்சர். ஆனந்த் ராஜ், ஒரு இளம்பெண்ணை (லலிதகுமாரி) கடத்தி வந்து ரூமில் அடைத்து வைத்துவிட்டு அமைச்சருக்கு போன் செய்வார். அமைச்சர் ராதாரவி, ஆனந்த்ராஜ் இடத்திற்கு வருவார்.
அமைச்சர்: ஒரு திறப்பு விழாவுக்குப் போயிருந்தேன். உன்னோட போன் வந்தது... உடனே கிளம்பி வந்துட்டேன்.
ஆனந்த்ராஜ்: இதுவும் திறப்புவிழாதாங்க... பொண்ணு புதுசுன்னு சொல்லவந்தேன்...
அமைச்சர்: பொண்ணு அழகா?
ஆனந்த்ராஜ்: கிளி மாதிரி
அமைச்சர்: மூக்கு நீளமா?
ஆனந்த்ராஜ்: அமைச்சர் ஆனபிறகு கூட குறும்பு போகல, போங்க...
(இளம்பெண்ணை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ரூமுக்குள் அமைச்சர் போகிறார். அவரைப் பார்த்து பயந்து போன இளம்பெண் கையெடுத்துக் கும்பிட்டு...)
இளம்பெண்: என்னை ஒண்ணும் செஞ்சுராதீங்க...
அமைச்சர்: கும்பிடு போடறவங்கள நாங்க நம்பறதே இல்ல. ஏன்னா, நாங்களே கும்பிடு போட்டுத்தான் ஜனங்கள ஏமாத்துறோம்.
இளம்பெண்: அண்ணே... என்னை விட்ருங்கண்ணே...
அமைச்சர்: அத்தான்னு சொல்றவங் களைக்கூட அடுத்தநாள் பாப்பேன். அண்ணேன்னு சொல்றவளை அன்னிக்கே பாத்திருவேன்... என்று அவளை பலாத்காரம் செய்ய முயல... அவள் முரண்டுபிடிக்க... அமைச்சர் ராதாரவி ரூமை விட்டு வேகமாக வெளியே வருவார்.
ஆனந்த்ராஜ்: என்னங்க அஞ்சு நாள் கிரிக்கெட் மூணு நாள்ல முடிஞ்ச மாதிரி... போனவுடனே வந்துட்டீங்க?
அமைச்சர்: ஆட்டமே நடக்கலடா... கேன்சல் ஆயிருச்சு
ஆனந்த்ராஜ்: ஆட்டமே நடக்கலியா?
அமைச்சர்: முரண்டு புடிக்கிறா...
ஆனந்த்ராஜ்: அவ முரண்டு புடிச்சா நீங்க விட்டுட்டு வந்திர்றதா? இங்க பாருங்கண்ணே... பொம்பளைங்க தானா வந்தா அது சம்பளம் வாங்கற மாதிரி. பலாத்காரம் பண்ணி அனுபவிச்சா, அது லஞ்சம் வாங்கற மாதிரி. உங்களுக்கு எது புடிக்கும்?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/alikhan2_17.jpg)
அமைச்சர்: அரசியல் லஞ்சம் புடிக்கும். இதுல சம்பளம் இருந்தாதானே நல்லா இருக்கும்?
ஆனந்த்ராஜ்: சம்பளம்தான் குடுக்க மாட்டேங்குறாளே... அவளை அனுப்பிடவா?
அமைச்சர்: ஏண்டா... மேடை மேல ஏறி மைக்க புடிச்ச பிறகு பேசக்கூடாதுன்னா எப்டிர்ரா?
ஆனந்த்ராஜ்: சரி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் அவளை கரெக்ட் பண்றேன்... ரிப்பனை கட் பண்றேன் என்று கூறிவிட்டு இளம்பெண் இருக் கும் அறைக்குள் ஆனந்த்ராஜ் போய் அவளிடம்...
ஆனந்த்ராஜ்: ஏண்டி... அவனவன் மந்திரி கூட போட்டோ எடுத்துக்கவே அலையுறான். உனக்கு படுக்குறதுக்கு கசக்குதாக்கும். "நாலு சுவத்துக்குள்ள அடக்கமா கெட்டுப்போன்னு சொன்னேன். நீ நடுஹால்லதான் கெட்டுப் போவேன்னு சொல்ற... நான் என்ன பண்றது...?' என்று கூறி அவளை பலவந்தமாக இழுக்க, அவள் பிடிவாதமாக மறுக்க... ஆனந்த்ராஜ் அவளை அடிக்க, வேகமாக சுவரில் சாய்ந்து அடிபட்டு அவள் இறந்துபோக... ஆனந்த்ராஜ் வெளியேறி அமைச்சரிடம் வர, அதைப் பார்த்த அமைச்சர்...
அமைச்சர்: என்னடா ஆச்சு?
ஆனந்த்ராஜ்: உங்ககூட படுக்கச் சொன்னேன்... அவ பாடையிலதான் படுப்பேன்னு போயிட்டா...
அமைச்சர்: கொன்னுட்டியா...? டேய்... இது வெளிய தெரிஞ்சா, உனக்கும் எனக்கும் சம் பந்தம் இருக்குன்னு சொல்லிருவாங்களேடா...
ஆனந்த்ராஜ்: சொன்னா?
அமைச்சர்: மந்திரி பதவியே போயிரும்டா...
ஆனந்த்ராஜ்: கவலைப்படாதீங்க. இந்த விஷயத்த நான் வெளிய சொல்லாத வரைக்கும் நீங்க மந்திரிதான்.
அமைச்சர்: அப்போ பாடிய...?
ஆனந்த்ராஜ்: நான் பாத்துக்கிறேன்.
அமைச்சர்: என்னைக் காட்டிக் குடுத்துறமாட்டியே?
ஆனந்த்ராஜ்: அக்கா இருக்கிற வரைக்கும்தான் மச்சான் உறவுங்கிற மாதிரி, நீங்க மந்திரியா இருக்கிற வரைக் கும்தான் எனக்கு இந்த சுகமெல்லாம்... தைரியமா போங்க. அடுத்த பொணம் வந்ததும் போன் பண்றேன்.
அமைச்சர்: என்னது...?
ஆனந்த்ராஜ்: இல்ல... அடுத்த பொண்ணு வந்ததும் போன் பண்றேன்.
இதுதான் அந்தக் காட்சி.
இதைப்போல பல காட்சிகள். நக்கல், நையாண்டி கலந்து அரசியல் அவலங்களை, அரசியல் பித்தலாட்டங் களை, அத்துமீறல்களையெல்லாம் எழுதியிருப்பேன். அதைப்போல காட்சிகள், அதைவிட சுவாரஸ்யமான காட்சிகள் இருப்பதுபோல கேப்டன் பிரபாகரன் அமைய வேண்டும்.
கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து வெற்றிபெற வேண்டும் என்றால், கேப்டனுக்கு எப்படி ஒரு கவனம் இருக்கும், அப்படி ஒரு வியூகம் இருக்கும்... அப்படி ஒரு கவனம் ஆர்.கே. செல்வமணிக்கு.
படத்தில் கேப்டன் விஜயகாந்த். ஆனால் படத்தின் கேப்டன் செல்வமணிதானே. ஒரு கேப்டனுக்கு மற்ற ஆட்டக்காரர்கள் எப்படி யெல்லாம் துணையாக இருக்கவேண்டுமோ, பக்கபலமாக இருக்க வேண்டுமோ அப்படி யெல்லாம் இருந்தால்தான் செல்வமணி நினைத்ததை சாதிக்க முடியம்.
அதற்காக என்ன செய்தார் ஆர்.கே. செல்வமணி?
(வளரும்...)
படம் உதவி: ஞானம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/alikhan-t_4.jpg)